Thursday, August 8, 2013

மனிதத் தேனி


வாழ்த்துவோமே "மனிதத் தேனி' சாந்தி சுப்பிரமணியம்" அவர்களை!!!!!!!
ஊக்கம் கொள்வோமே இவரைக் கண்டு....


திருமதி சாந்தி சுப்பிரமணியம் மற்றும் அவரது மாணவர் வேல்முருகன்

கிருஷ்ணகிரியில் இருந்து, வெறும் +2 முடித்த கையோடு, திருமணமாகி வந்தவர் சாந்தி சுப்ரமணியம்.
ஆலம் விதையாய் திருமண பந்தம் எனும் புதிய உலகத்துக்கு அடி எடுத்து வைத்தவர், இன்று விருட்சமாகி பல கண் தெரியாத மாணவர்களின் படிப்புக்கு, பேருதவிகளை செய்து அவர்களாலேயே இன்று 'மனிதத் தேனி' என்று புகழப்பட்டு வருகிறார்.

தற்போது சாந்தி சுப்ரமணியத்தின் உதவியோடு பி எட், மற்றும் மற்ற பட்டப்படிப்புகள் படித்துவிட்டு, வேலை பார்க்கும் கண் தெரியாதவர்கள் பல பேர். வெறும் +2 படித்து விட்டு உங்களால் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது,

"+2 படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது, பிறகு கணவர், குழந்தைகள் என்று எனக்கு நேரம் சரியாக இருந்தது. எனக்கு டாக்டராக வேண்டும் என்று கனவு இருந்தது. அந்த கனவு சிதைந்து போனாலும், குடும்ப   வாழ்வில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன், எனது நேரத்தை பயனுள்ளதாக செலவிட வேண்டும் என்று தோன்றி, மேற்கொண்டு படிக்க  முடிவு செய்தேன்" என்று கூறும் சாந்தி சுப்ரமணியம் படித்துப் பெற்று இருக்கும் பட்டங்கள் எத்தனை தெரியுமா?

எம்.காம், பி.எட், எம்.பில், பி.ஏ ஆங்கிலம், பி.ஜி.டிப்ளமோ இன் கைடன்ஸ் அன்ட் கவுன்சிலிங் என நீண்டு கொண்டு போகிறது. சரி, இத்தனை பட்டங்கள் பெற மொட்டிவேஷனாக அமைந்தது எது என்று இவரிடம் கேட்டால்..

"2000ம் ஆண்டு, எனக்கு ஒரு தோழி ரெகமண்ட் செய்தார்கள், அதாவது கண் தெரியாத மாணவர்கள் நிறைய பேர்  இருக்கிறார்கள். அவர்களுக்கு உன்னால் முடிந்த பாடங்களை வாசித்து காண்பித்து, தேவைப்பட்டால் ரெக்கார்ட் செய்து கொடு என்று அறிவுறுத்தினார்கள். அங்கு சென்ற பின்னர் நான் ஒரு புதிய உலகத்தைக் கண்டேன். அந்த பிரமிப்பில் நான் அடிக்கடி  அவர்களுடன் நேரத்தை கழிக்க ஆர்வமுடன் செல்வேன்.

அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா  என்பதைவிட, நான் அவர்களிடம் கண்ட ஆற்றலும், ஊக்கம் மிகுந்த இந்த தனி உலகமும் எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது.  நான் இவர்களை ஊக்குவித்து படிக்க சொல்வதும், அவர்கள் என்னை ஊக்குவித்து மேலும் மேலும் படிக்கத் தூண்டியதும் ஒரு தனி சுகமான அனுபவங்கள்.

நான் கரஸில் படித்து இப்படி அதிக பட்டங்கள் வாங்கியதில் அவர்களுக்கு அதிக பங்கு உண்டு. ஒரு கண் தெரியாதவருக்கு உதவி  செய்தேன், அவர்கள் பயனடைந்தார்கள் என பல பேர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவர்களால் நாமும் பயனடைகிறோம் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.

எனது ஜாதக யோகம் எனக்கு வேலைக்குப் போகும் தருணமே வாய்க்காதாம். ஆனால், எனக்கும் நான் படித்த படிப்பினால் எடுத்த எடுப்பில் வேலை கிடைத்தது. அதுவும் கல்லூரிப் பேராசிரியராக! என் பிள்ளைகள் சொல்வார்கள்.  'என்னம்மா, காலேஜ் என்றால் ஜாலியா சினிமாவில் காண்பது போல இருக்கும் என்று நினைத்தால்,  நோட்ஸ், ப்ராஜக்ட் என்று வதைக்கிறார்கள்' என்று.

'ஆனால், படிக்க கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்காத நான், பேராசிரியராக அன்று கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்த நாள் இருக்கிறேதே. அடடா என்ன சுக அனுபவம் தெரியுமா! நான்  என் பிள்ளைகளிடம் சொன்னேன், நான்  போனதுதான் உண்மையில் சினிமா காலேஜ் என்று, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கல்லூரிக்கு  சென்று படிக்காத நான் கல்லூரி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க போகிறேன்...எவ்வளவு இனிமையான அனுபவம் பாருங்கள்!'

'இந்த நிலைக்கு நான் வர காரணம் என்ன? ஒரு நாள் ஒரு கண் தெரியாத மாணவரிடம் என்னுடன் வந்து இருந்த ஒரு பெண்மணி கேட்டார். தம்பி, நீ என்னவாகப் போகிறாய் என்று. அதற்கு அந்த மாணவர் நான் ஐ ஏ எஸ் ஆகணும் மேடம் என்றார். கண் தெரியாத உன்னால் எந்த அளவுக்கு படித்து ஐ ஏ எஸ் ஆக முடியும் என்று நினைக்கிறாய் என்று அந்த பெண்மணி கேட்டார்.'

'அதற்கு அந்த மாணவர் சொல்லிய பதில்தான் என்னை இத்தனை பட்டங்கள் வாங்கத் தூண்டியது. அந்த மாணவர், உங்களுக்கும், எங்களுக்கும்  என்ன பெரிய வித்தியாம் மேடம்? நீங்கள் பார்த்து படிப்பதை நாங்கள் கேட்டு படிக்கிறோம். அவ்வளவுதானே? எங்களால் ஏன் ஐ ஏ எஸ் ஆக முடியாது என்று கேட்டார். எனக்கு அப்படியே புல்லரித்துப் போனது. அவர்களிடம் இப்படி நான் நிறைய கற்றுக் கொண்டதன் விளைவே, இப்போது நான் படித்து வாங்கிய பட்டங்கள்.'

என்னை, இந்த கண் தெரியாத மாணவர்கள் நன்றாக  ஊக்குவிப்பார்கள். அவர்கள்தான், தமிழக அரசின் ஆசியர் தகுதித்  தேர்வு எழுத சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்கள். அப்போதுதான் ஆசிரியர் தகுதிக்கான முதல் தகுதித் தேர்வு ஆரம்பமானது. நான் இந்த மாணவர்களிடம் குரூப் ஸ்டடி  செய்து பாஸ் பண்ணி, இப்போது அம்பத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் +1,+2 வகுப்பு எடுக்கிறேன். எங்கள் வீட்டில் நான் எனது பிள்ளைகள் தினேஷ் குமார், விக்னேஷ் குமார், என்று மூவரும் படித்தோம். எனக்குத்தான் முதலில் வேலை கிடைத்தது. அடுத்து எனது பிள்ளைகள் இருவருக்கும் வேலை கிடைத்தது.

இது போன்ற வித்தியாசமான மகிழ்வான தருணங்கள் எத்தனை குடும்பத்தில் நடக்கும்? இந்த வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க காரணமாக இருந்தது, நான் கண் தெரியாத மாணவர்களுடன் பழக ஆரம்பித்த போதுதான். உண்மையில் அவர்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுத்தேன் என்று தெரியாது. அவர்களிடம் நான்  நிறைய கற்றுக் கொண்டு முன்னேறியுள்ளேன்." என்று மீண்டும் மீண்டும் பெருமையுடன் சொல்கிறார் சாந்தி சுப்ரமணியம்.

அவர் வீட்டுக்கு அவரைக் காண சென்ற போது, வந்திருந்த கண் தெரியாத மாணவர் வேல்முருகன், "சாந்தி சுப்ரமணியம் மேடம் இல்லை என்றால், நான் இந்த அளவுக்கு படித்திருக்க முடியாது. இப்போது எஸ் ஆர் எம் கல்லூரியில் இலவசமாக பி எட் படிக்க சீட் கிடைத்துள்ளது. இதற்கும் எனக்கு படிக்க, சாட் வரைய மேடம்தான் உதவி செய்வார்கள். மேடம் அத்தனை சுறுசுறுப்பு. நாங்கள் 'மனிதத் தேனி' என்று பெயர் வைத்துள்ளோம். மேடம் படிப்பில் மட்டுமல்லாது, என்னுடைய கபடி விளையாட்டு, ஓவியம் வரையும் திறமை அனைத்தையும் ஒரு அம்மா மாதிரி இருந்து ஊக்குவிப்பார்கள்" என்று நெகிழ்வுடன் கூறுகிறார்.
- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி, படங்கள் சூர்யா
 எழில் செல்வியின் இக்கட்டுரைகளையும் வாசித்துச் செல்க :



http://www.4tamilmedia.com/knowledge/essays/16089-2013-08-01-09-53-21


Thanks to:  4தமிழ்மீடியா

No comments: